×

கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை


கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கம் கல்குவாரியில் 300 அடி ஆழத்தில் குளிக்க சென்ற 5 கல்லூரி மாணவர்களில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனை தொடர்ந்து 10 மணி நேரம் போராடி மீட்டு குழுவினர் மீட்டனர்.  வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், 12 கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளின் டெண்டர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் இயற்கை சூழல் மிகுந்த காட்டு பகுதிகளின் இடையே 12 கல்குவாரிகளிலும் தண்ணீர் தேங்கி சுற்றுலா தளம்போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் ஆராய்ந்து கல்குவாரியில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காக விடுமுறை நாட்களில் ஜோடி ஜோடியாக படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ.இரண்டாம் ஆண்டு படித்து வரும் 5 மாணவர்கள் கீரப்பாக்கம் கல்குவாரிக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் வந்து குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது பாறாங்கள் மீது நின்று செல்பி எடுக்கும்போது சுழல் காற்று வீசியது. இதில் தீபக்சாரதி நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார். இதனை கண்டதும் மற்ற 5 மாணவர்களும் தீபக்சாரதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 3 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 300 அடி ஆழத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி இறந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகன் தீபக்சாரதி (20), தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி, முல்லை நகர் பகுதியை சேர்ந்த ஜாபர்உசேன் என்பவரின் மகன் முகமது இஸ்மாயில் (19), தர்மபுரி மாவட்டம், கோபிநாத் பட்டி, கோவில்பட்டி கூட்ரோட்டை சேர்ந்த சரவணன் என்பவர் மகன் விஜய்சாரதி (19) ஆகிய 3 பேரின் உடல்நிலை தேடும் பணியில் மறைமலை நகர், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய தீயணைப்பு துறை போலீசார் தீவிரமாக தேடினர். இருப்பினும், இரவு நேரம் என்பதால் தேடும் பணியை கைவிட்டு சென்றனர்.

பின்னர் நேற்று காலை 6 மணி முதல் வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் விஜய்சாரதியின் சடலத்தை நேற்று காலை 9 மணி அளவில் மீட்டனர். பின்னர் சென்னை மெரினாவில் இருந்து (ஸ்க்யூபா) மீட்பு குழுவினர் வரவைக்கப்பட்டு 300 அடி ஆழத்தில் பல மணி நேரமாக தேடினர். இதில் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதால் மீண்டும் கோவளத்திலிருந்து ஆக்சிஜன் வரவைக்கப்பட்டு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் தீபக்சாரதி மற்றும் முகமதுஇஸ்மாயில் ஆகிய இருவரின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்டனர். பின்னர், 3 பேரின் உடல்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர்களது நண்பர்களான அப்துல்பாசித் (19), சூர்யா (19) ஆகிய இருவரிடம் காயார் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமை பார்த்து வரவேண்டாம்
சென்னை மெரினா பீச், கோவளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் விடுமுறை நாட்கள் மற்றும் கோடை காலங்களில் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் யூடியூப் வீடியோவை பார்த்து இரவு பகல் பாராமல் கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரிக்கு ஜோடி ஜோடியாக வந்து கூடாரம் அமைத்து மதுபானம், கஞ்சா, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு உல்லாசமாக இருக்கின்றனர். பின்னர் குளிக்க செல்கின்றனர். அப்போது போதை தலைக்கு ஏறியதும் செய்வது அறியாமல் ஆட்டம் போடும்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி வருகின்ற சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எனவே, இப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் இன்ஸ்டாகிராமை பார்த்து யாரும் இங்கு வந்து குளிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Calquary ,Guduvancheri ,Keerappakkam Kalquari ,Vandalur ,Keerappakkam panchayat ,Kalquari ,
× RELATED வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு வயது ஆண் குழந்தை பரிதாப பலி